

சென்னை,
ரசிகர்களை சந்தித்து மகிழ்விக்க சி.எஸ்.கே. சார்பில் 'ரோர்26' என்ற பெயரில் மெகா ரசிகர்கள் திருவிழா சேப்பாக்கத்தில் நேற்று அரங்கேறியது. ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் சீருடையுடன் குவிந்தனர். முதலில் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இரவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரியால் அரங்கம் அதிர்ந்தது. 4 மணி நேரம் நீடித்த இந்த நிகழ்ச்சியை 23 ஆயிரம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.
இதனிடையே, வீரர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நடிகர் சிவகாத்திகேயன் பேசியதாவது:-
'தோனி..... உங்களை தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன். இங்குள்ள அத்தனை கேலரியில் இருந்தும் பார்த்துள்ளேன். முதல்முறையாக உங்களை இவ்வளவு நெருக்கமாக பார்ப்பது பூரிப்பாக உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களை போல் எனக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். சி.எஸ்.கே. ஒரு உணர்வுபூர்வமான அணி. அதனால் தான் தோனி களம் இறங்கும் போது அத்தனை ஆரவாரம்...ஆர்ப்பரிப்பு. சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் சேப்பாக்கத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறேன். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு சத்தம் எனது வீடு வரை கேட்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சிவகார்த்திகேயன் தோனியை நோக்கி 'ஒரு முறை ஓய்வு குறித்து உங்களிடம் கேட்ட போது இப்போது இல்லை என்று கூறுனீர்கள். ஒவ்வொரு சீசனிலும் இதையே நீங்கள் சொல்ல வேண்டும். 60 வயது வரை நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்' என தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அதற்கு தோனி, அது கடினம் எனது உடல்தகுதி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றார். உடனே சிவகாத்திகேயன், நீங்கள் இன்னும் உடல்தகுதியுடன் தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு தோனி, 'நான் முயற்சிக்கிறேன்' என பதில் அளித்தார்.