அன்று தோனி...இன்று ஹர்மன்பிரீத்...ரன் அவுட்டால் கலைந்த இந்தியாவின் உலகக்கோப்பை கனவு...!

2019 ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோனி ரன் அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: Twitter 
Image Courtesy: Twitter 
Published on

கேப்டவுன்,

8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி 9 ரன், மந்தனா 2 ரன், அடுத்து வந்த யாஷ்டிகா 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரீத் இணை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இவர்கள் இருவரும் ஆடிய விதத்தை பார்க்கையில் இந்திய அணி எளிதாக வென்று விடும் என நினைத்து கொண்டிருந்த வேளையில் ஜெமிமா 43 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து மறுமுனையில் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிய கேப்டன் ஹர்மன்பிரீத் 52 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் 15 வது ஓவரின் 4வது பந்தில் 2வது ரன்னுக்காக ஓடிய போது ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன உடன் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களே எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிபோட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது.

ஹர்மன்பிரீத் ரன் அவுட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அணியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் ரன் அவுட் ஆன விதம் 2019 ஆண்கள் ஒருநாள் உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இறுதி கட்டத்தில் டோனி எவ்வாறு ஒரு சில இன்ச்களில் கிரீசுக்குள் வராமல் ரன் அவுட் ஆனாரோ அதே போல் நேற்று ஹர்மன்பிரீத்தும் ரன் அவுட் ஆனார்.

2019 ஆண்கள் ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதில் தோனி ரன் அவுட் ஆன பின்னர் உலகக்கோப்பையின் கனவு எவ்வாறு கலைந்து போனதோ, அதே போல் நேற்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆன பின்னர் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போனது.

தோனி மற்றும் ஹர்மன்பிரீத்தின் ஜெர்சி எண்களும் ஏழு. துரதிர்ஷ்டவசமாக, இந்தியா இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறவில்லை. இந்த ஒற்றுமைகளை வைத்து தோனி மற்றும் ஹர்மன்பிரீத்தை டுவிட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com