

கொல்கத்தா,
டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மோதுகிறது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதி சுற்றை தீர்மானிக்கும் போட்டியில் அதிரடியாக ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சஞ்சு சாம்சன் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதாவது, இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு சாம்சன், ஹெல்மெட்டை வீசிவிட்டு முழங்காலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, அவர் ஹெல்மெட்டைத் தரையில் வீசியதுதான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் தனது கிரிக்கெட் உபகரணங்களை (பேட், ஹெல்மெட் போன்றவை) கோபத்திலோ அல்லது அதீத உற்சாகத்திலோ தரையில் வீசினால், அது விளையாட்டு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த வீரருக்கு அபராதம் அல்லது ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டை 'எறிந்ததாக' கருதப்பட்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஐசிசி நடத்தை விதிகளின்படி, இத்தகைய செயல்கள் பொதுவாக லெவல் 1 குற்றமாகவே கருதப்படுகின்றன. கோபம் அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துவதை விட, உற்சாகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீரர்களிடம் நடுவர்கள் பெரிய கண்டிப்பு காட்டுவதில்லை.
எனவே, சஞ்சு சாம்சன் மீது இதுவரை அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக இது போன்ற கொண்டாட்டங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பதால், அவர் அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.