

மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த திரில்லிங்கான லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது.
வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கூறுகையில், இது நல்ல வெற்றி. சிறிய ஸ்கோரை விரட்டும் போது நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். கடைசியில் வென்று விடலாம் என்கிற நிலைக்கு சென்று விடக்கூடாது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தது. அதனை அவர்களது பவுலர்கள் சரியாக பயன்படுத்தினர்.
மூன்று நாட்களுக்கு முன்பு இதே மைதானத்தில் நடந்த போட்டியில் இரு அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடிந்தது. தற்போது இரு அணிகளும் 120 ரன்களை தாண்டுவதே கடினமாகி விட்டது. நாங்கள் சிக்கலின்றி ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினோம். எப்படி என்றாலும் வெற்றி, வெற்றி தான்.
கடைசியில் தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் உதவியது. நெருக்கடியான கடைசி கட்டத்தில் டோனி எப்படி பதற்றமின்றி செயல்படுவாரோ? அதேபோன்று ஏறக்குறைய தினேஷ் கார்த்திக்கும் கடைசி கட்டத்தில் அமைதியாக செயல்பட்டு அசத்துகிறார் என்றார்.