இந்தியாவில் இன்னுமா இது நடக்கிறது..? இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வியப்பு

டி20 கிரிக்கெட்டில் மிக குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சூர்யவன்ஷி படைத்தார்.
லண்டன்,
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய 14 வயது வீரரான சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், அதிவேகமாக சதமடித்த இந்தியர் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்தார். இதனால் பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சூர்யவன்ஷியை பாராட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில் சச்சினை மிஞ்சும் அளவுக்கு 14 வயதில் சூர்யவன்ஷி சதமடித்து அசத்தியுள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் பாராட்டியுள்ளார். இப்படி 15 வயதுக்கும் குறைவான வீரர்கள் அசத்துவது இந்தியாவில் இன்னுமா நடக்கிறது? என்றும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இது நம்ப முடியாததாக இருந்தது. இது போன்ற விஷயங்கள் இந்தியாவில் இன்னும் நடக்கிறது. நீங்கள் திரும்பச் சென்று சச்சின் வளர்ந்த கதையை பார்க்க வேண்டும். ஆனால் இந்த கதை இன்னும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. 14 வயது வீரர் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அனைவரும் சொல்லுகின்றனர். நான் 14 வயதிற்குள் இருந்தபோது 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் கொஞ்சம் ரன்கள் அடித்துக் கொண்டிருந்தேன். உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் 35 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
இதுவே இந்திய கிரிக்கெட்டின் பற்றிய கதையாகும். இதுதான் அவர்களுடைய ஆழமான பலமாகும். அவர்களுடைய மற்றொரு இளம் வீரர் உள்ளூரில் சதத்தை அடித்துள்ளார். இது வரலாற்று ரீதியாக சிறந்த வீரர்களை உருவாக்காத இந்தியாவின் சில பகுதிகளில் ஐ.பி.எல். எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பது பற்றியது. அவர் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களை உருவாக்காத பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருப்பது போல் தெரிகிறது" என்று கூறினார்.






