நிதிஷ் ரெட்டி வேணாம்.. அவரை தேர்வு செய்யுங்கள் - கம்பீருக்கு இந்திய முன்னாள் வீரர் யோசனை

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி இடம்பெற்றுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய டெஸ் அணியின் புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இதனிடையே இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஹர்பஜன் சிங், இந்த தொடருகான இந்திய அணியில் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக ஷர்துல் தாகூரை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கொஞ்சம் பேட்டிங் செய்யத் தெரிந்த பவுலர் இந்தியாவுக்கு தேவை. 7, 8வது இடம் வரை செய்யக்கூடிய வீரர்கள் நம்மிடம் உள்ளார்கள். எனவே 8-வது இடத்தில், விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங்கில் பங்களிக்கக்கூடிய ஒருவர் தேவை. மாறாக அதிகமாக பேட்டிங் செய்து கொஞ்சமாக பவுலிங் செய்யக்கூடிய வரை பார்க்கக்கூடாது.
இந்த விஷயத்தில்தான் என்னுடைய பார்வையில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாகூர் முன்னிலை பெறுகிறார். நிதிஷ் ரெட்டி கொஞ்சம் பவுலிங் செய்யக்கூடிய முழுமையான பேட்ஸ்மேன். ஆனால் அவர் ஐ.பி.எல். தொடரில் நிறைய பந்து வீசியதை நான் பார்க்கவில்லை. எனவே திறமையான பயிற்சியாளரான கம்பீர் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்" என கூறினார்.






