‘என் மீதான விமர்சனம் குறித்து கவலையில்லை’ - விராட் கோலி

எனது ஆட்டம் பற்றி வரும் விமர்சனம் குறித்து நான் கவலைப்படுவதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.
‘என் மீதான விமர்சனம் குறித்து கவலையில்லை’ - விராட் கோலி
Published on

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கேப்டவுனில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், நான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். எனது பார்ம் குறித்து மக்கள் பேசுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோல் சில முறை விமர்சனத்தை சந்தித்து இருக்கிறேன். எனது ஆட்டம் குறித்து வெளியில் இருந்து வரும் விமர்சனம் குறித்து நான் கவலைப்படுவதில்லை. நான் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன்.

எனது ஆட்ட திறமையை இன்னும் யாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து முகமது சிராஜ் தேறி வருகிறார். அவர் இன்னும் போதிய உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை கடைசி டெஸ்ட் போட்டியில் களம் இறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அணியில் இருக்கும் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதனால் சிராஜிக்கு பதிலாக யாரை களம் இறக்குவது என்பதை முடிவு செய்வது கடினமானதாகும். இது குறித்து தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை கேப்டனிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மதிப்பும், அவர் அணிக்கு அளித்த பங்களிப்பும் எல்லோருக்கும் தெரியும். அந்த இடத்தை அஸ்வின் சரியாக நிரப்பி வருகிறார்.

ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து அஸ்வின் வெளிநாட்டு மண்ணில் குறிப்பாக பந்து வீச்சில் சிறப்பான முன்னேற்றம் கண்டு இருக்கிறார் என்பது அவருக்கு தெரியும். கடந்த டெஸ்டில் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அணிக்கு பயனுள்ள பங்களிப்பை அளித்தார். அவரால் எந்தவொரு சூழ்நிலையிலும் சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக செயல்பட முடியும்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் லோகேஷ் ராகுல் கேப்டன் பணியை நேர்த்தியாக செய்தார். கேப்டன் பதவியில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் வித்தியாசமானதாக இருக்கும். ரஹானே, புஜாரா விஷயத்தில் அழுத்தம் காரணமாக மாற்றம் செய்வது என்பது சரியானதாக இருக்காது. அணியின் வீரர்கள் மாற்றம் என்பது இயற்கையாக நிகழ வேண்டும் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் தவறு இழைப்பது இயற்கை தான். ஆனால் செய்த தவறை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது. அத்துடன் செய்த தவறை குறைந்தபட்சம் அடுத்த 6-7 மாதத்துக்குள் மீண்டும் செய்யக்கூடாது. இது எனக்கு டோனி தொடக்க கால கட்டத்தில் அளித்த ஆலோசனையாகும். அதனை எப்போதும் மனதில் வைத்து செயல்பட்டு வருகிறேன். ரிஷாப் பண்ட் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவார். கடந்த ஆட்டத்தில் அவர் ஷாட் ஆடியதில் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என்று நம்புகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com