

புதுடெல்லி,
டெல்லியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை இலங்கை அணி போராடி டிரா செய்தது. இளம் வீரர்கள் தனஞ்ஜெயா டி சில்வாவின் செஞ்சுரியும், ரோஷன் சில்வாவின் அரைசதமும் அந்த அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது.
இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியத்தில் கடந்த 2ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 536 ரன்களும், இலங்கை 373 ரன்களும் எடுத்தன. 163 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 31 ரன்களுடன் பரிதவித்தது. தனஞ்ஜெயா டி சில்வா (13 ரன்), மேத்யூஸ் (0) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தனஞ்ஜெயா டி சில்வாவும், மேத்யூசும் தொடர்ந்து விளையாடினர். சிறிது நேரத்தில் மேத்யூஸ் (1 ரன், 20 பந்து) ஜடேஜாவின் சுழற்பந்தில், ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. சீக்கிரமாகவே இலங்கையின் கதையை இந்திய வீரர்கள் முடித்து விடுவார்கள் என்ற நினைப்புடன் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
ஆனால் மனஉறுதியுடன் போராடிய இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களின் வியூகங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினர். 5வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வாவும், கேப்டன் தினேஷ் சன்டிமாலும் இணைந்து 33 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர். ஸ்கோர் 147 ரன்களை எட்டிய போது, சன்டிமால் (36 ரன், 90 பந்து, 2 பவுண்டரி) அஸ்வினின் பந்து வீச்சில் சில அடி இறங்கி வந்து பந்தை விளாச முயற்சித்து கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து புதுமுக வீரர் ரோஷன் சில்வா, தனஞ்ஜெயா டி சில்வாவுடன் கைகோர்த்தார். இருவரும் இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்தனர். பொதுவாக இந்திய ஆடுகளங்கள் கடைசி நாளில் சுழற்பந்து வீச்சுக்கு தாறுமாறாக ஒத்துழைக்கும். ஆனால் இந்த ஆடுகளத்தின் தன்மை மாறாததால் சுழலின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. குறிப்பாக அஸ்வினின் பந்துவீச்சு எடுபடாமல் போனதால் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை இருவரும் சாதகமாக பயன்படுத்தி, தண்ணி காட்டினர்.
அபாரமாக ஆடிய தனஞ்ஜெயா டி சில்வா தனது 3வது சதத்தை நிறைவு செய்தார். இலங்கை அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்த தனஞ்ஜெயா டி சில்வா தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். வலி அதிகமாக இருந்ததால் வேறு வழியின்றி 119 ரன்களுடன் (219 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரிட்டயர்ஹர்ட் ஆகி வெளியேறினார்.
தொடர்ந்து விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா வந்தார். இவரும், ரோஷன் சில்வாவும் தடுமாற்றமின்றி விளையாட இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்து போனது. இலங்கை அணி 2வது இன்னிங்சில் 103 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. ரோஷன் சில்வா 74 ரன்களுடனும் (154 பந்து, 11 பவுண்டரி), டிக்வெல்லா 44 ரன்களுடனும் (72 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 10 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 2வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இரட்டை செஞ்சுரி அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். அத்துடன் இந்த தொடரில் அதிகபட்சமாக மொத்தம் 610 ரன்கள் குவித்த அவரே தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்து இந்தியாஇலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 10ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய இலங்கை வீரர் 26 வயதான தனஞ்ஜெயா டி சில்வா 119 ரன்கள் சேர்த்த நிலையில் காயத்தால் வெளியேறினார். இந்திய மண்ணில் 4வது இன்னிங்சில் (அதாவது இலக்கை துரத்தும் போது) வெளிநாட்டு வீரர் சதம் அடிப்பது இது 4வது முறையாகும். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ்109* ரன் (டெல்லி, 1987ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர்102* ரன் (பெங்களூரு, 1998ம் ஆண்டு), பாகிஸ்தானின் யூனிஸ்கான்107* ரன் (கொல்கத்தா, 2007ம் ஆண்டு) ஆகியோர் சதம் அடித்திருக்கிறார்கள். இவர்களில் அதிகபட்ச ரன்களை தனஞ்ஜெயா பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.