துலீப் கோப்பை கிரிக்கெட் : இன்று தொடக்கம்

ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் போன்ற நட்சத்திர வீரர்கள் இதில் விளையாட உள்ளனர்.
பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தின் மைதானங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் கால் பதிக்கின்றன. வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டல அணிகள் காலிறுதியில் விளையாடுகின்றன.
தேசிய அணிக்காக விளையாடாத நாட்களில், காயம் அடையாத அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருப்பதால் இந்த போட்டியில் நட்சத்திர வீரர்கள் பலரும் களம் காணுகிறார்கள். இதனால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டல அணியில் சாய் கிஷோர், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோரும், ஷர்துல் தாக்குர் தலைமையிலான மேற்கு மண்டல அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.
இன்று தொடங்கும் காலிறுதி ஆட்டங்களில் அங்கித் குமார் தலைமையிலான வடக்கு மண்டலம்- இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டலம், துருவ் ஜூரெல் தலைமையிலான மத்திய மண்டலம்- ரோங்ஜென் ஜோனதன் தலைமையிலான வடகிழக்கு மண்டல அணிகள் மோதுகின்றன.






