

கொழும்பு/புதுடெல்லி,
3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. போட்டியை நடத்தும் இலங்கையுடன், இந்தியா, வங்காளதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இலங்கையில் மதவாத மோதல் தொடர்பாக அவசரநிலை 10 நாட்களுக்கு பிரகடனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏற்கனவே திட்டமிட்டப்படி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் தொடர்பான செய்தியானது வெளியாகி உள்ளது. கண்டியில் உள்ள நிலைதான் புகைப்படங்களில் வெளியாகி உள்ளது, கொழும்புவில் கிடையாது. இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், கிரிக்கெட் போட்டி நடைபெறும் இலங்கை தலைநகர் கொழும்புவில் இயல்புநிலையே காணப்படுகிறது என புரிந்து கொண்டோம். இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு கூடுதல் தகவல் இருந்தால் அறிவிப்பு வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
பிசிசிஐ செயல் தலைவர் சி.கே. கண்ணா பேசுகையில், இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, கிரிக்கெட் போட்டிக்கு எந்தஒரு எச்சரிக்கையும் இல்லை என உறுதியளிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் அணி போட்டியில் கலந்து கொள்ளும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்ததை அடுத்து அங்கு 10 நாட்கள் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது.