டக்கெட்டை வித்தியாசமாக வழியனுப்பிய ஆகாஷ் தீப்... விமர்சித்த இங்கிலாந்து பயிற்சியாளர்

இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது டெஸ்ட் டிரா) முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் அடித்தன.
அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் (43 ரன், 38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் 'ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்' அடிக்க முயற்சித்தபோது துருவ் ஜூரெலிடம் சிக்கினார். அவுட் ஆனதும் டக்கெட்டின் தோள்மீது கைபோட்டு பேசியபடி வித்தியாசமாக ஆகாஷ் தீப் வழியனுப்பி வைத்தார். இது பேசு பொருளாகி உள்ளது.
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பென் டக்கெட், ஆகாஷ் தீப்பை நோக்கி, 'உங்களால் என்னை இங்கே அவுட்டாக்க முடியாது' என்று கூறி ஸ்லெட்ஜிங் செய்தார். இதன் காரணமாகவே ஆகாஷ் தீப், டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றியதும் ஆக்ரோஷமாக கத்தியதுடன், இப்படி வழியனுப்பியும் வைத்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆகாஷ் தீப்பை இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளரான மார்கஸ் டிரெஸ்ட்கோதிக் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "இதுவே என்னுடைய காலமாக இருந்திருந்தால் நிறைய வீரர்கள் ஆகாஷ் மேலே முழங்கையை விட்டிருப்பார்கள் என்று சொல்வேன். ஒரு பேட்ஸ்மேனை அவுட் செய்த பிறகு ஒரு பந்துவீச்சாளர் இப்படிச் செய்ததை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். இத்தொடரில் இரு அணி பவுலர்களும் அவ்வப்போது பேட்ஸ்மேன்களிடம் சில வார்த்தைகளைப் பேசுவதை பார்த்திருக்க முடியும்.
ஆனால் இந்த செயல் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதல்லவா?. நான் அதைப் பற்றி சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக சொன்னேன். பென் அங்கே பெரிதாக எதுவும் செய்யவில்லை. நீங்கள் அவுட்டாகும்போது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியே செல்ல வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் உங்கள் வேலை முடிந்துவிட்டது. இருப்பினும் பவுலர் அந்த பாணியில் அவரை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்.






