இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 74 ரன் இலக்கு

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 74 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 74 ரன் இலக்கு
Published on

காலே,

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 135 ரன்களும், இங்கிலாந்து 421 ரன்களும் எடுத்தன. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. திரிமன்னே (76 ரன்), எம்புல்டெனியா (0) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய திரிமன்னே தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். தனது முதலாவது சதத்தை இதே மைதானத்தில் 2013-ம் ஆண்டில் அடித்த திரிமன்னே அடுத்த சதத்துக்காக 8 ஆண்டுகள் போராடி இருக்கிறார். திரிமன்னே 111 ரன்களில் (251 பந்து, 12 பவுண்டரி) விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். கேப்டன் சன்டிமால் (20 ரன்), விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (29 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மிடில் வரிசையில் மேத்யூஸ் மட்டும் அணியை தாங்கிப்பிடித்தார். முன்னிலை பெற உதவிய அவர் கடைசி விக்கெட்டாக 71 ரன்களில் (219 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார்.

முடிவில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 136.5 ஓவர்களில் 359 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஜாக் லீச் 5 விக்கெட்டுகளும், டாம் பெஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 74 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது. இந்த எளிய இலக்கை இங்கிலாந்து வீரர்கள் நேற்றே எடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சு தாக்குதலில் மிரண்டு போனார்கள்.

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் சிப்லி (2 ரன்) ஜாக் கிராவ்லி (8 ரன்) இருவரும் எம்புல்டெனியாவின் சுழலில் சிக்கி நடையை கட்டினர். முதலாவது இன்னிங்சில் இரட்டை சதம் நொறுக்கிய கேப்டன் ஜோ ரூட் (1 ரன்) ரன்-அவுட் ஆனார். 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் இங்கிலாந்து அணியினர் நெருக்கடிக்குள்ளானார்கள். அதன் பிறகு ஜானி பேர்ஸ்டோவும் (11 ரன்), டான் லாரன்சும் (7 ரன்) மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 36 ரன் மட்டுமே தேவைப்படுவதால் இங்கிலாந்து அணி இன்றைய கடைசி நாளில் குறுகிய நேரத்தில் இலக்கை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com