இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அந்த வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம் உறுதி - கம்பீர் மறைமுக தகவல்

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.

இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. மேலும் அந்த அணியில் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்த கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார். இருப்பினும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி காணப்படுகிறது.

இதனிடையே இந்த தொடரில் பங்கேற்க சுப்மன் கில், கம்பீர் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி நேற்று மும்பையில் புறப்பட்டு சென்றது. முன்னதாக புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அதில் கருண் நாயர் குறித்தும், உள்ளூர் தொடர்களில் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சில கருத்துகளை கூறினார்.

இது தொடர்பாக கவுதம் கம்பீர் கூறியதாவது, "இளம் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். கவுண்டி கிரிக்கெட்டில் சிறிது விளையாடிய கருணின் அனுபவம் இருப்பது நல்லது.

மேலும் அவர் தற்போது இந்தியா ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்துள்ளார். இந்த வகையான சுற்றுப்பயணங்களில் நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் இருப்பது எப்போதும் நல்லது. அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம். இதனால் அவர் இங்கே தனது திறமையை வெளிப்படுத்த முடியும்" என்று கூறினார்.

இதன் மூலம் கருண் நாயருக்கு பிளேயிங் லெவனில் கிடைக்கும் என்பதை கம்பீர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com