

பல்லகெலே,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இலங்கையின் பல்லகெலேவில் இன்று நடைபெற்றுவரும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை - இங்கிலாந்து மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
இலங்கை அணி 2.4 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரர் பதும் நிசங்கா அவுட் ஆனார். அவர் 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 4 ரன்னிலும், பவன் ரதனாயகே (0) ரன் எதுவும் எடுக்காமலும், தொடக்க வீரர் கமில் மிசாரா 6 ரன்னிலும், டுனித் வெல்லாலே 10 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
தற்போதைய நிலவரப்படி இலங்கை 6 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இலங்கை வெற்றிபெற 14 ஓவரில் 113 ரன்கள் எடுக்க வேண்டும். சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் 3 ஓவரில் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.