250 ரன்கள் குவித்து இருந்தால் கூட கஷ்டமாகத்தான் இருந்திருக்கும் - தோல்வி குறித்து டு பிளெசிஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியடைந்தது.
image courtesy: twitter/ @RCBTweets
image courtesy: twitter/ @RCBTweets
Published on

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி படிதார், பாப் டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அரை சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை வெறும் 15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறுகையில்: "இந்த போட்டியில் அடைந்த தோல்வி உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. போட்டியின் ஆரம்பத்திலேயே டாசை இழந்தது பின்னடைவை தந்தது. அதோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடியதால் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

பனி இருந்ததால் இந்த மைதானத்தில் 250 ரன்களை குவித்து இருந்தால் கூட கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். 196 ரன்கள் என்பது அவர்களுக்கு எளிதாக மாறிவிட்டது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக பும்ரா மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். எங்களது அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சில் நாங்கள் சில தவறுகளை செய்ததாலேயே தோல்வியை சந்திக்க நேர்ந்தது" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com