முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும்... - பேட் கம்மின்ஸ் பேட்டி

Image Courtesy: @ICC
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.
லார்ட்ஸ்,
3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி. கோப்பை ஒன்றை தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, எப்போதும் விஷயங்கள் விரைவாக மாறக்கூடும். ஆனால் அது இங்கு மிகுந்த தொலைவில் இருந்தது. சில விஷயங்களை நாங்கள் சரியாக செய்யவில்லை. முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும் எங்களால் எதிரணியை வீழ்த்த முடியவில்லை.
தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் எங்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. மார்க்ரம் மற்றும் பவுமா எங்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் வழங்காத வகையில் விளையாடினர். இது தென்ஆப்பிரிக்க அணி ஏன் இங்கு இருக்கிறார்கள் என்பதையும், வெற்றியாளராக இருக்க தகுதியானவர்கள் என்பதையும் காட்டியுள்ளது.
அவர்கள் இந்த ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எனக்கு டெஸ்ட் போட்டி மிகவும் பிடிக்கும். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெரிய சாதனையாகும். ஷூட்-அவுட்டான இறுதிப்போட்டி எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இருப்பினும் இது ஒரு நல்ல வாரமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






