உடல்தகுதி தேர்வில் மீண்டும் தோல்வி: இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி நீக்கம்?

தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
உடல்தகுதி தேர்வில் மீண்டும் தோல்வி: இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி நீக்கம்?
Published on

ஆமதாபாத்,

உடல்தகுதி தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்ததால் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தோள்பட்டை வலியால் அவதிப்படுவதால் முதல் கட்ட போட்டிகளில் ஆடுவது சந்தேகமாகி இருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்திக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதன்படி பவுலர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தை 8 நிமிடம் 15 வினாடியில் ஓடிக் கடக்க வேண்டும். குறைந்தது இரண்டு முறை இவ்வாறு ஓடி உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும். ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்த வருண் சக்ரவர்த்தி முதல் கட்ட சோதனையில் தேறவில்லை. 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் 29 வயதான வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்துக்கு பிறகு எந்தவிதமான போட்டியிலும் விளையாடாத வருண் சக்ரவர்த்தி 2-வது முறையாக இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை இழக்கிறார். கடந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்த அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வாகி தோள்பட்டை காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டதுடன், ஆடும் லெவனிலும் இடம் பிடித்து பிரமாதப்படுத்தியது நினைவிருக்கலாம்.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வருண் சக்ரவர்த்தி போட்டி எதிலும் விளையாடி முழு உடல் தகுதியை நிரூபிக்கும் முன்பே அவரை தேர்வாளர்கள் தேர்வு செய்தது ஏன்? என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தேர்வாளர்களுக்கு ஒரு பாடமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய ராஜஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதேபோல் அணிக்கு தேர்வான புதுமுக ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியாவும் உடல்தகுதி பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்.

இதற்கிடையே இந்திய 20 ஓவர் அணியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தோள்பட்டை வலிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெறுவதுடன் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் கட்ட ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com