20 ஓவர் தொடரின் தோல்வி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை நியூசிலாந்து வீரர் நிகோல்ஸ் பேட்டி

20 ஓவர் தொடரின் தோல்வி ஒரு நாள் போட்டி அணியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று நியூசிலாந்து வீரர் நிகோல்ஸ் கூறினார்.
20 ஓவர் தொடரின் தோல்வி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை நியூசிலாந்து வீரர் நிகோல்ஸ் பேட்டி
Published on

ஆக்லாந்து,

ஹாமில்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 348 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது. ராஸ் டெய்லரின் சதமும் (109 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (78 ரன்), பொறுப்பு கேப்டன் டாம் லாதம் (69) ஆகியோரின் அரைசதமும் அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

இது குறித்து நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் 28 வயதான ஹென்றி நிகோல்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 0-5 என்ற கணக்கில் முழுமையாக இழந்தோம். ஆனால் அதன் தாக்கம் ஒரு நாள் போட்டி அணியில் இல்லை. ஒரு நாள் போட்டிக்காக நாங்கள் அணியாக இங்கு கைகோர்த்த போது, முந்தைய தோல்வி குறித்து சிந்தித்து வருத்தப்படவில்லை. எனவே எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. சிறிய மைதானம், பெரிய இலக்கு, அதை எட்ட முடிந்தது இனிமையான அனுபவமாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் நாங்கள் விரட்டிப்பிடித்த மிகப்பெரிய ஸ்கோர் இது தான். இதில் எனது பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சியே.

கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் 4-வது வரிசையில் ராஸ் டெய்லரின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது. தனது அனுபவத்தின் மூலம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் குவிப்பு மட்டுமல்ல, அவருடன் இணைந்து ஆடும் போது வழங்கும் ஆலோசனையும் பேட்டிங்குக்கு உதவுகிறது. அத்துடன் மைதானத்தின் அளவும் (ஒரு பக்கம் பவுண்டரி தூரம் குறைவு) எங்களுக்கு சாதகமாக இருந்தது.

டாம் லாதம் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடினார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அவருக்கும் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கினார். கேப்டனாக அவர் அணியை முன்னெடுத்து அமைத்து தந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. சிறிய மைதானமான இங்கு 360 அல்லது 370 ரன்கள் வரை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில், எங்களது பவுலர்கள் இந்திய பேட்மேன்களை கட்டுப்படுத்தியதை பாராட்டியாக வேண்டும். இவ்வாறு நிகோல்ஸ் கூறினார்.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் நாளை (இந்திய நேரப்படி காலை 7.30 மணி) நடக் கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com