பகார் ஜமான் அவுட் சர்ச்சை: நேரலையில் ரவி சாஸ்திரி விளக்கம்


பகார் ஜமான் அவுட் சர்ச்சை: நேரலையில் ரவி சாஸ்திரி விளக்கம்
x
தினத்தந்தி 22 Sept 2025 8:36 AM IST (Updated: 22 Sept 2025 8:39 AM IST)
t-max-icont-min-icon

ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் பகர் ஜமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஆன பகார் ஜமான் 15 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனார். ஆனால் அந்த பந்தை சாம்சன் தரையோடு தரையாக பிடித்ததால் அது கேட்ச் இல்லை என்று கருதிய பகார் ஜமான் அந்த கேட்சை மறுபரிசீலனை செய்யுமாறு நடுவரிடம் கேட்டார்.

அதை 3-வது நடுவர் சோதித்து பார்க்கையில் பந்து சாம்சனின் நுனி விரல்களில் பட்டு பவுன்சாகி அவருடைய கைகளுக்குள் கேட்சாக மாறுவது தெளிவாக தெரிந்தது. இதனால் 3-வது நடுவரும் அவுட் வழங்கினார். இருப்பினும் அதனை நாட் அவுட் என கருதிய பகார் ஜமான் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதனை பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் தீர்ப்பு வழங்கியதாக விமர்சித்தனர்.

இது குறித்து நேரலையில் விளக்கமளித்த இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி, “மைதானத்தில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்றுவதற்கு தெளிவான முடிவு கிடைக்க வேண்டும். ஆனால் அங்கே 3-வது நடுவர் பந்துக்கு அடியில் சாம்சன் விரல்கள் இருப்பதாக சொல்கிறார்” என்று கூறினார்.

1 More update

Next Story