

விசாகப்பட்டினம்,
ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை 2011ம் ஆண்டில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ஒருவராக இருந்தவர் சச்சின் தெண்டுல்கர். கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 ரன்களை எடுத்து இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர். ரசிகர்களால் லிட்டில் மாஸ்டர் என அன்புடன் அழைக்கப்படுபவர்.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா குரல் கொடுத்தார். அதை தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர்.
விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்களை பொறுப்புடன் டுவீட் செய்யுங்கள் என இந்தியா கூறி இருந்தது.
சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்து கொள்ள முடியாது. அந்நிய சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்கள் ஆக இருக்க முடியாது. இந்தியாவை இந்தியர்களுக்கு தெரியும். அவர்கள் இந்தியாவுக்கானவற்றை முடிவு செய்ய வேண்டும். ஒரு நாடாக நாம் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருப்போம் என்று பதிவிட்டார்.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.
அவரது இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் கடந்த வாரம் சச்சினின் கட்-அவுட் மீது கருப்பு மையை பூசினர். இதற்கு பதிலடி தரும் வகையில் சச்சினின் ரசிகர்கள் அவரது போஸ்டருக்கு பால் அபிசேகம் செய்துள்ளனர். சச்சின் சச்சின் என்று கோஷங்களையும் எழுப்பினர்.
யாருக்கும் எதிராக அவர் இல்லை. ஒவ்வொருவரையும் அவர் நேசிக்கிறார். ஒவ்வொருவராலும் எப்பொழுதும் அவர் நேசிக்கப்படுவார் என அந்த போஸ்டரில் எழுதப்பட்டு இருந்தது.