ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி
Published on

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 29-ந் தேதி இந்தியாவில் தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட இந்த ஐ.பி.எல். போட்டி, 20 ஓவர் உலக கோப்பை தொடர் தள்ளிப்போனதால் அந்த கால இடைவெளியை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை அரங்கேறுகிறது.

மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. மத்திய விளையாட்டு அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்து இருந்தாலும், உள்துறை மற்றும் வெளியுறவு துறையின் அனுமதிக்காக கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். நிர்வாகமும் காத்து இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக் கொள்ள மத்திய அரசு (உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகம்) கொள்கை அளவில் அனுமதி அளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இது குறித்து எழுத்துபூர்வமான அனுமதி ஓரிரு நாட்களில் எந்த நேரத்திலும் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. 53 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் களம் காணும் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், போட்டியுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் விரிவாக தெரிவித்துள்ளது. இதனை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் ஆரம்பித்து விடுவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட அங்கத்தினரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கி இருப்பதுடன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையையும் நடத்தி வருகின்றன.

வீரர்கள் தங்களுடன் குடும்பத்தினரை அழைத்து செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் மட்டுமே மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியில் செல்ல முடியும் என்று விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான அணியினர் தங்களுடன் குடும்பத்தினரை அழைத்து செல்லமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி விமானம் மூலம் வருகிற 22-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com