இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி: ​தவான், பண்ட், ஹர்தீக் அரை சதம் விளாசல்

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தவான், பண்ட், ஹர்தீக் அரை சதம் விளாசி உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி: ​தவான், பண்ட், ஹர்தீக் அரை சதம் விளாசல்
Published on

புனே,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் 6 பவுண்டரிகளை விளாசினார். அவரது ஆட்டத்தில் சிக்சர்கள் வரவில்லை. 37 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரஷீத் பந்து வீச்சில் போல்டானார்.

ஆனால், மறுபுறம் ஷிகர் தவான் அதிரடியாக 10 பவுண்டரிகளை விளாசி தள்ளி அரை சதம் கடந்துள்ளார். 67 ரன்களில் ரஷீத் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடந்த 2 ஆட்டங்களிலும் அரை சதம் கடந்து அதிரடி காட்டிய கோலி மற்றும் ராகுல் இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த ரிஷாப் பண்ட் இந்த ஆட்டத்திலும் சிறப்புடன் விளையாடினார்.

அவர் 5 பவுண்டரிகளுடன் 4 சிக்சர்களையும் பறக்க விட்டார். எனினும், 78 ரன்களில் கர்ரன் பந்து வீச்சில் பட்லரிடம் கேட்ச் ஆனார். ஹர்தீக் பாண்ட்யா அரை சதம் எடுத்துள்ளார். இதனால், இந்திய அணியில் 3 வீரர்கள் அரை சதம் அடித்து அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்திய அணி 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஹர்தீக் பாண்ட்யா (58) மற்றும் குருணல் பாண்ட்யா (4) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com