ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
image courtesy: BCCI twitter
image courtesy: BCCI twitter
Published on

மொகாலி,

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற கையுடன் இந்திய அணி இந்த போட்டியில் கால் பதிக்கிறது. உலகக் கோப்பை போட்டி பணிச்சுமையை கருத்தில் கொண்டு கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு முதல் 2 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அரங்கேறும் இந்த போட்டி தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக தங்களது அணியின் கலவையை கடைசியாக சோதித்து பார்த்து தவறுகளை களைந்து வலுவாக சீரமைக்க நல்லதொரு வாய்ப்பாகும்.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை வென்றால் 'நம்பர் ஒன்' அந்தஸ்துடன் உலகக் கோப்பை போட்டியில் அடியெடுத்து வைக்க முடியும். இதேபோல் ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் தரவரிசையில் முதலிடத்தை தனதாக்க முடியும். மேலும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தால் பாகிஸ்தான் அணி 'நம்பர் ஒன்' இடத்தில் தொடருவதில் பிரச்சினை இருக்காது. அப்போது இந்திய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்படும்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com