

ஐதராபாத்,
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று மோதின.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆர்சிபி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் கிளாசன் ஆகியோர் அரைசதங்கள் விளாசினர்.
பின்னர் 256 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு வெங்க டேஷ் அய்யர் (44 ரன், 19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) தடாலடியான தொடக்கம் தந்தார். ஆனால் விராட் கோலி (15 ரன்), தேவ்தத் படிக்கல் (21 ரன்) நிலைக்கவில்லை.20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 200 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் 55 ரன் வித்தியாசத்தில் 9-வது வெற்றியை பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகளும் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ளன.ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு முதல் இடத்தையும், குஜராத் 2-வது இடத்தையும், ஐதராபாத் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில், தர்மசாலாவில் வரும் 26-ம் தேதி நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
நியூ சண்டிகரில் வரும் 27-ம் தேதி நடக்கும் வெளியற்றுதல் சுற்று போட்டியில் ஐதராபாத்தும், 4-வது இடத்தைப் பிடிக்கும் அணியும் மோத உள்ளன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
நியூ சண்டிகரில் வரும் 29-ம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றில், முதல் தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணியும், வெளியற்றுதல் சுற்று போட்டியில் வெல்லும் அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதி ஆட்டம் வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.