

லாடெர்ஹில்,
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாடெர்ஹில்லில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான ஜான் கேம்ப்பெல் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய நிகோலஸ் பூரன் 20(16) ரன்களும், ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமலும், ரோவ்மன் பவெல் 4(5) ரன்னிலும், கார்லஸ் பிராத்வெய்ட் 9(24) ரன்னிலும், சுனில் நரின் 2(4) ரன்னிலும், கீமோ பால் 3(11) ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சற்று பொறுப்புடன் ஆடிய பொல்லார்ட் 49(49) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. ஷெல்டன் காட்ரெல் மற்றும் ஒஷானே தாமஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளும் , வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலாஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில், ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஷிகார் தவான் 1(7) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா 24(25) ரன்களும், ரிஷாப் பாண்ட் (0) ரன் ஏதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். ஓரளவு ரன் சேர்த்த இந்த ஜோடியில், மணிஷ் பாண்டே 19(14) ரன்களும், அவரைத்தொடர்ந்து விராட் கோலி 19(29) ரன்களும், அடுத்து களமிறங்கிய குர்ணால் பாண்ட்யா 12(14) ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் ரவீந்திர ஜடேஜா 10(9) ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 8(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 17.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக காட்ரெல், சுனில் நரைன் மற்றும் கேமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.