ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மழையால் பாதிக்கப்பட்ட 3-வது நாள் ஆட்டம்.. இலங்கை 136/5


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மழையால் பாதிக்கப்பட்ட 3-வது நாள் ஆட்டம்.. இலங்கை 136/5
x
தினத்தந்தி 31 Jan 2025 5:04 PM IST (Updated: 31 Jan 2025 5:16 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை - ஆஸ்திரேலியா முதல் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார்.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களும் அடித்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமேன் மற்றும் லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 42 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வெகு நேரமாகியும் மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்றைய நாளில் வெறும் 27 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சண்டிமால் 63 ரன்களுடனும், குசல் மெண்டிஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் மற்றும் மேத்யூ குனேமேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 518 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story