ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம்

முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் அமைத்தது. அதில் முகமது ஹபீஸ் சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம்
Published on

துபாய்,

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் பிலால் ஆசிப்பும், ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபஸ்சானே ஆகியோரும் டெஸ்டில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பிறகு ஆஸ்திரேலியா ஆடும் முதல் டெஸ்ட் இது தான்.

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹபீசும், இமாம் உல்-ஹக்கும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். தேனீர் இடைவேளை வரை இந்த ஜோடியை அசைத்து பார்க்க முடியவில்லை. 37 வயதான முகமது ஹபீஸ் தனது 10-வது சதத்தை அடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது முதல் சதமாகும். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் (63 ஓவர்) சேர்த்த நிலையில் பிரிந்தது. இமாம் உல்-ஹக் 76 ரன்களில், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். முதலில் பந்து வீசிய ஒரு டெஸ்டின் இன்னிங்சில் முதல் 60 ஓவர்கள் வரை தொடக்க ஜோடியை ஆஸ்திரேலிய பவுலர்களால் பிரிக்க இயலாமல் போனது 2000-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். முகமது ஹபீஸ் 126 ரன்களில் (208 பந்து, 15 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து இறங்கிய அசார் அலி 18 ரன்னில் வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 255 ரன்கள் சேர்த்துள்ளது. ஹாரிஸ் சோகைல் (15 ரன்), முகமது அப்பாஸ் (1 ரன்) களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com