இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா


இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
x

இலங்கை - ஆஸ்திரேலியா முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார்.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 ரன்கள் அடித்திருந்தது. கவாஜா 147 ரன்களுடனும் , சுமித் 104 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டிராவிஸ் ஹெட் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் குவித்தது. சுமித் 141 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை கடந்தார். கவாஜா 232 ரன்களிலும், ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும், ஸ்டார்க் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமேன் மற்றும் லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 610 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story