முதல் டெஸ்ட்: துருவ் ஜூரெல் அபார சதம்.. இந்தியா ஏ 403 ரன்கள் குவிப்பு

image courtesy:PTI
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ முதல் டெஸ்ட் கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
லக்னோ,
இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள்) போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாம் கான்ட்ஸ்டாஸ் (109 ரன்), ஜோஷ் பிலிப் (123 ரன்) சதம் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய ‘ஏ’ அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் இரவு பெய்த மழையால் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த தமிழக வீரர் ஜெகதீசன் 64 ரன்னில் சேவியர் பார்லெட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப்பிடம் சிக்கினார். மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் 73 ரன்னில் கூப்பர் கனோலி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (8 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய ‘ஏ’ அணி 4 விக்கெட்டுக்கு 403 ரன்கள் குவித்துள்ளது. தேவ்தத் படிக்கல் 86 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 113 ரன்களுடனும்களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இத்தகைய சூழலில் இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. எனவே இந்த ஆட்டம் டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.






