

நியூ சண்டிகர்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், விக் கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் இடம் பெற்றிருப்பதால் போதிய அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பேட்டிங்கில் 3-வது வரிசையில் ஆடப்போவது தமிழகத்தின் சாய் சுதர்சனா அல்லது தேவ்தத் படிக்கல்லா என்பதற்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விடைகொடுத்து விட்டார். கம்பீர் கூறும் போது, 'உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சாய் சுதர்சனுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் குறைவான டெஸ்ட் போட்டிகளில் (6 டெஸ்ட்) மட்டுமே விளையாடி உள்ளார். அதுவும் இங்கிலாந்து மண்ணில் தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கினார். அங்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது எளிதானது அல்ல என்பதை நாம் அறிவோம்.
சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக (722 ரன்) ஆடினார். அதனால் நாங்கள் அவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்போகிறோம். ஆனாலும் அவருக்கு இன்னும் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்' என்று குறிப்பிட்டார். இதனால் தேவ்தத் படிக்கல் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது தான். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் கிரிக்கெட்டுக்கு முழுக்கு, ஜடேஜாவுக்கு ஓய்வு, அக்ஷர் பட்டேலுக்கு கல்தா என அவர்கள் இல்லாததால் சுழல் தாக்குதலுக்கு குல்தீப் யாதவ் தலைமை தாங்குகிறார். வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார். 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு புதுமுக வீரர்கள் ஹர்ஷ் துபே அல்லது மனவ் சுதார் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படுவர்.
ஐ.பி.எல்.-ல் தடுமாறிய ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த போட்டியின் மூலம் பார்முக்கு திரும்ப தீவிரம் காட்டுவார்கள். இது ரிஷப் பண்டின் 50-வது டெஸ்ட் போட்டி என்பது கவனிக்கத்தக்கது. இந்திய அணி கடைசியாக கடந்த நவம்பரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 0-2 என்ற கணக்கில் தோற்று கடும் விமர்சனத்திற்குள்ளானது. எனவே உள்ளூரில் இந்த சீசனை வெற்றியோடு தொடங்குவதற்கு இது அருமையான வாய்ப்பாகும்.
ஆப்கானிஸ்தான் அணி
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 2018-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அறிமுகம் ஆனது. அறிமுக டெஸ்டிலேயே இந்தியாவுடன் பெங்களூருவில் மோதிய ஆப்கானிஸ்தான் 2-வது நாளிலேயே இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இதுவரை 12 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் 4-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. ஆனால் பெரிய அணிகளை வென்றதில்லை. இந்த முறையும் முடிந்த அளவுக்கு கடும் சவால் அளிக்க முயற்சிப்பார்கள். பிரதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்குவது அவர்களுக்கு நிச்சயம் பின்னடைவு தான். அண்மையில் ஐ.பி.எல். போட்டிகள் நடந்த நியூசண்டிகாரில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 31-வது டெஸ்ட் மைதானமாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் துபே அல்லது மனவ் சுதார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆப்கானிஸ்தான்: செடிகுல்லா அடல், ரமனுல்லா குர்பாஸ், ரக்மத் ஷா,
ஹஷ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மதுல்லா ஒமர்ஜாய், ரமனுல்லா. அப்சர் ஜசாய், ஷராபுத்தின் அஷ்ரப், நங்கேயலியா கரோட்டி, கியாஸ் அகமது, ஜியார் ரகுமான்
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.