

மும்பை,
ஐபிஎல் தொடரில் பல சுவாரசியமான சாதனைகளும், வினோதமான சென்டிமென்ட்களும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பலித்து வரும் ஒரு விசித்திரமான சென்டிமென்ட் தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அது, கேப்டன்களின் குழு புகைப்படத்தில் ஹர்திக் பாண்டியாவின் அருகில் நிற்கும் கேப்டனை பற்றியதாகும்.
2023 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கேப்டன்களின் புகைப்படத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு அருகில் தோனி நின்றிருந்தார். அந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2024 சீசனில் ஹர்திக்கின் அருகில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றிருந்தார். அந்த ஆண்டில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
2025 ஐபிஎல் சீசனுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு அருகில் ரஜத் படிதார் நின்றிருந்தார். அந்த சீசனில் பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று நீண்டகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நடப்பு 2026 சீசனுக்கான கேப்டன்களின் புகைப்படத்தில், ஹர்திக் பாண்டியாவின் அருகில் சுப்மன் கில் நின்றிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், 2026-லும் தொடருமா அந்த 'மேஜிக்' என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
முதல் தகுதி சுற்றில் தோல்வியடைந்து மீண்டு வந்து இறுதிப்போட்டியை எட்டியுள்ள குஜராத் அணி, கோப்பையை வென்று செண்டிமென்டை தொடர வைக்குமா? அல்லது ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளுமா? என்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இத்தகைய சென்டிமென்ட்கள் ரசிகர்களின் நம்பிக்கைகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. இறுதியில் போட்டியின் முடிவை தீர்மானிப்பது வீரர்களின் செயல்திறன், அழுத்தமான சூழ்நிலையை கையாளும் திறன் மற்றும் களத்தில் வெளிப்படும் ஆட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.