பவுண்டரி எல்லையில் பாய்ந்து பறந்து 'பீல்டிங்' செய்த ஆஸி. வீரர்.. ரசிகர்கள் வியப்பு- வைரல் வீடியோ

இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
Image Courtesy: Screengrab Twitter cricketcomau
Image Courtesy: Screengrab Twitter cricketcomau
Published on

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி டேவிட் மலானின் அதிரடி சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 291 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஸ்மித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் (78 பந்துகள்) குவித்தார். இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் செய்த பீல்டிங் தொடர்பான வீடியோ, தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 45 ஆவது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட டேவிட் மலான், தீப் மிட் விக்கெட் திசையில் அடித்தார்.

அவர் அடித்த அடிக்கு பந்து பவுண்டரி லைனை கடந்து சிக்சர் சென்று விடும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்பகுதியில் பீல்டிங் நின்ற ஆஷ்டன் அகர், ஒரே நொடியில் மிகவும் உயரத்தில் தாவி அற்புதமாக பந்தை பிடித்து பவுண்டரி செல்லாமல் அதனை உள்ளே வீசினார். இதை கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பவுண்டரி லைன் அருகே அற்புதம் செய்த ஆஷ்டன் அகரின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com