வார்னே உடலுக்கு மெல்போர்ன் மைதானத்தில் இறுதிஅஞ்சலி...!

வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து தனி விமானத்தில் இன்று மெல்போர்ன் கொண்டு செல்லப்படுகிறது.
வார்னே உடலுக்கு மெல்போர்ன் மைதானத்தில் இறுதிஅஞ்சலி...!
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 52 வயதான வார்னே சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இரு சாதனை பவுலர்களில் ஒருவர் ஆவார்.

உடல் பருமனை குறைக்க கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்த அவர் கடந்த 2 வாரமாக திரவ உணவு வகைகளை மட்டுமே எடுத்துக் கொண்டதாகவும், தொடர்ந்து புகைப்பிடித்ததும் மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது இறப்பு இயற்கையானது, சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து தனி விமானத்தில் இன்று மெல்போர்ன் கொண்டு செல்லப்படுகிறது. அடுத்த வாரம் அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்ய உள்ளனர்.

அதைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்க விக்டோரியா மாகாண அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கிரிக்கெட் ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com