விரைவில் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெற்றிகளை பெறும் - இங்கிலாந்து பயிற்சியாளர் ஆதரவு

image courtesy: AFP
கம்பீர் தம்முடைய வழியில் அணியை நடத்துவதாக மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கம்பீர் தம்முடைய வழியில் அணியை வழி நடத்துவதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். எனவே ஆரம்பத்தில் சில இடர்பாடுகள் இருந்தாலும் விரைவில் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெற்றிகளைப் பெறும் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவருடன் இதற்கு முன் வேலை செய்துள்ளதால் கம்பீர் சிறந்த லீடர் என்று நான் சொல்வேன். இதற்கு முன் வகித்த பதவிகளில் அவரால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது. அவர் இந்த அணியுடன் மட்டுமே இருக்கிறார். தமக்கு கிடைத்துள்ள திறமையான வீரர்களை வைத்து அவர் சிறந்தவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. விரைவில் இந்திய அணி அவரது தலைமையில் நிறைய வெற்றிகளை பெறும்.
பயிற்சியாளர்கள் என்றாலே வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் தங்களுடைய சொந்த வழியை கண்டறிய வேண்டும். சில நேரங்களில் எங்களைப் பயிற்சியாளர்கள் என்று சொல்வது சரியான வார்த்தையா என்றும் எனக்கு தெரியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் விஷயங்களை வித்தியாசமாக செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அணுகுமுறை இருக்கும்.
சில பயிற்சியாளர்கள் தங்கள் வழியில் வீரர்களை அசவுகரியமற்ற சூழ்நிலைகளுக்குள் தள்ளி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார்கள். இன்னும் சில பயிற்சியாளர்கள் கொஞ்சம் வித்தியாசமாக டெக்னிக்கல் அடிப்படையில் செயல்படுவார்கள். மற்ற பயிற்சியாளர்கள் தங்கள் வழியில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கலாம். அந்த வகையில் இவை அனைத்துமே வித்தியாசமானது" என்று கூறினார்.






