நிறைய வாய்ப்பு கொடுத்தாச்சு எனவே அவருக்கு பதிலாக வேற வீரருக்கு வாய்ப்பு கொடுங்க - சஞ்சய் மஞ்ரேக்கர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் கே.எஸ். பரத் கீப்பிங் செய்வதில் நன்றாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.

காயமடைந்த ரிஷப் பண்ட்க்கு பதிலாக கடந்த 2023 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 221 ரன்களை 20.09 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். குறிப்பாக 30 வயதை நிரம்பியுள்ள அவர் இதுவரை பெரும்பாலும் சொந்த மண்ணில் விளையாடியும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில் கே.எஸ். பரத்துக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், 30 வயதாகும் பரத் இளம் வீரர் கிடையாது என்பதால் இனியும் நம்பாமல் மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறும் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அவர் நிறைய முறை தன்னுடைய முதல் தொடரில் விளையாடுவது போல் செயல்படுகிறார். ரிஷப் பண்ட் காயமடைந்தது முதல் விளையாடி வரும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 4 முழுமையான போட்டிகளில் விளையாடினார். எனவே இன்னும் கே.எஸ் .பரத் மீது நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து முதலீடு செய்வதில் மதிப்பு உள்ளதாக நான் கருதவில்லை.

மேலும், அவர் 20 வயதாகும் வீரர் கிடையாது. அணி நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் நியாயமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பதை நம்புகிறது. ஆனால் நான் ரிஷப் பண்ட் வருவதற்கு முன்பாக மற்றொரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப் பார்ப்பேன். பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத கே.எஸ். பரத்தை தாண்டி இந்தியா பார்க்க வேண்டும்.

ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஏனெனில் தற்போது அனைத்து அணிகளிலும் விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கில் பெரிய பங்காற்றி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக கடந்த 3 - 4 வருடங்களாக ரிசப் பண்ட் பேட்டிங்கில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பாருங்கள். எனவே அந்த அம்சத்தை இந்திய அணி நிர்வாகம் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com