அவருக்கு அடுத்த போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கனும் - கபில் தேவ்

image courtesy: @BCCI
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வரிசையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த போட்டியில் அறிமுகமான அன்சுல் கம்போஜுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கடந்த போட்டியில் அறிமுகமான அவரை உடனடியாக அணியிலிருந்து வெளியேற்றக்கூடாது என்றும், அவரை அணியில் தக்கவைத்து வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒரு அறிமுக வீரராக அவரிடம் இருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? முதல் போட்டியிலேயே 10 விக்கெட் எடுக்க வேண்டுமா என்ன? ஒரு வீரரின் திறமையை மட்டும் பாருங்கள். என்னைப் பொருத்தவரை அவர் முதல் போட்டியில் செயல்பட்ட விதம் போதுமானது தான். நிச்சயம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை நிர்வாகம் வழங்க வேண்டும்.
அப்போது தான் அவர் வருங்காலத்தில் சிறப்பான வீரராக மாறுவார். எல்லோருக்குமே தாங்கள் விளையாடும் முதல் போட்டியின் போது சற்று பதட்டம் இருக்கும். அந்த வகையில் தான் அவரும் பதட்டம் அடைந்துள்ளார். அதை தவிர்த்து வேறு எந்த விசயமும் அதில் கிடையாது. அவரிடம் பந்துவீச்சில் நல்ல திறமை இருக்கிறது. அதனால் அவருக்கு போதிய அவகாசத்தை கொடுங்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமாகும் ஒரு வீரரிடம் இதுபோன்ற சில தவறுகள் நடைபெறுவது சகஜம்தான். எனவே வருங்காலத்தை கணக்கில் கொண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். நிச்சயமாக தான் செய்யும் தவறுகளில் இருந்து அவர் பாடத்தை கற்றுக் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.






