நடப்பு ஐபிஎல்-தொடரில் மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவது இல்லை: மேக்ஸ்வெல்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் வெறும் 32 ரன்களை மட்டுமே மேக்ஸ்வெல் எடுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல்-தொடரில் மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவது இல்லை: மேக்ஸ்வெல்
Published on

பெங்களூரு,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங் மற்றும் தனது ஸ்பின் பவுலிங் திறனால் எதிரணியை கலங்கடிக்கும் திறன் கொண்ட மேக்ஸ்வெல் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை.. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும்படி  அவர் விளையாடவில்லை. பெங்களூரு அணி தொடர் தோல்விகளால் தடுமாறிக் கொண்டு இருக்கும் நிலையில், மேக்ஸ்வெல் பார்ம் இல்லாமல்  மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது அந்த அணிக்கு மேலும் சுமையாக மாறியது.

நேற்று ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.  கட்டை விரல் காயம் காரணமாக நேற்று அவர் ஆடவில்லை என்றே நம்பப்பட்டது. ஆனால், தனக்கு பிரேக் தேவைப்படுவதாக டு பிளெசிஸிடம் கேட்டதாக மேக்ஸ்வேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேக்ஸ்வெல் கூறியதாவது:-

"நான் கடந்த போட்டி முடிந்தவுடனேயே நேராக டு பிளெசியிடமும் பயிற்சியாளர்களிடமும் சென்று எனக்கு பதில் வேறு வீரரை ஆடவைப்பதற்கான தருணம் இது என்றேன். எனக்கு கடந்த காலத்திலும் இப்படி நடந்துள்ளது. எனவே, எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இடைவேளை தேவை என்பதை உணர்ந்தேன். மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்குமானால் அதற்குள் நான் என் உடல் மற்றும் மன நிலையை திடப்படுத்திக் கொள்வேன்" என்று கூறியுள்ளார்.

மேக்ஸ்வெல் இப்படி கூறியிருப்பதால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் ஓய்வில் இருக்கப்போவது உறுதியாகியுள்ளது. மேலும், 35-வயதான மேக்ஸ்வெல்லுக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுவதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com