முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் - 34 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி

ஐதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
image courtesy: IndianPremierLeague twitter
image courtesy: IndianPremierLeague twitter
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 61 லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் இன்னும் எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. டெல்லி அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 62-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும் முனைப்பில் குஜராத் அணியும், இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்ற நிலையில் ஐதராபாத் அணியும் ஆடின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சஹா ரன் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். இதையடுத்து சுப்மன் கில்லுடன் தமிழக வீரர் சாய் சுதர்சன் களம் இறங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அரைசதத்தை நெருங்கிய வேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுதர்சன் 47 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஹர்த்திக் பாண்ட்யா 8 ரன்னிலும், மில்லர் 7 ரன்னிலும், திவேட்டியா 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஒருபுறம் நிலையான மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 56 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. குஜராத் அசத்தலாக பந்துவீச, முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் ஐதராபாத் அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகள் இழந்து தத்தளித்தது. கிளாசன் மட்டும் தனியாகப் போராடி அரை சதம் கடந்தார். 8-வது விக்கெட்டுக்கு கிளாசனுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பின்னர் கிளாசன் பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். கிளாசன் 64 ரன்னில் அவுட்டானார். புவனேஷ்வர் குமார் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் நுழைந்தது. குஜராத் சார்பில் முகமது ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com