முழு உடற்தகுதியுடன் திரும்பினால் ஹர்திக் பாண்டியா தான் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் – ரவி சாஸ்திரி

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மாறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் விளையாடினால் டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற Extra Innings நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி,

"ஹர்திக் முழு உடற்தகுதியுடன் விளையாடும்போது டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்தவர். அவர் உண்மையான போட்டியை வென்று கொடுக்கக்கூடிய வீரர். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருப்பதால், மீண்டும் களமிறங்கி தனது திறமையை நிரூபிக்க அதிக ஆர்வத்துடன் இருப்பார்" என தெரிவித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய தொடக்கம்?

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறுவதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பரிமாற்றத்தில் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு அணிகளும் தங்களது விருப்பத்தை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளன. தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2024ஆம் ஆண்டு மீண்டும் இணைந்த ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். ஆனால், அவரது தலைமையில் அணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணி 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இதனால் 2027ஆம் ஆண்டு ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்தால் நீண்ட ஓய்வில் ஹர்திக்

ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு ஏற்பட்ட தொடர் காயங்கள் காரணமாக ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களாகப் போட்டிகளில் விளையாடவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அந்தத் தொடரில் நான்கு போட்டிகளைத் தவறவிட்டார். பின்னர் காலில் ஏற்பட்ட காயமும் அவரது ஓய்வை நீட்டித்தது.

அக்டோபரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், வலது காலின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட புதிய காயம் காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை.

மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கு முன்பு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். எனவே, முதலில் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு போட்டிக்குத் தயாராக வேண்டும் என்பதே ஹர்திக்கின் தற்போதைய முக்கிய இலக்காக உள்ளது.

முழு உடற்தகுதியுடன் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தால், அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்கும் கூடுதல் பலம் கிடைக்கும். ஆனால், அதற்கு முன்பு அவர் காயத்திலிருந்து மீண்டு மீண்டும் களத்திற்குத் திரும்ப வேண்டியது அவசியமாகும்

X