ஹர்திக் பாண்ட்யா என்னுடைய நல்ல நண்பர் இருப்பினும்.... - சாய் கிஷோர் பேட்டி

Image Courtesy: X (Twitter) / File Image
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின.
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக இந்தப் போட்டியில் மும்பை பேட்டிங் செய்த போது 15வது ஓவரை தமிழக வீரர் சாய் கிஷோர் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த பாண்ட்யா அடுத்தப் பந்தில் ரன்கள் எடுக்கவில்லை. தனது அருகிலேயே அடிக்கப்பட்ட அந்தப் பந்தை எடுத்த சாய் கிஷோர் பாண்ட்யாவை முறைக்கும் வகையில் பார்த்தார்.
அதற்கு பதிலுக்கு முறைத்த பாண்ட்யா ஒரு வார்த்தையை சொல்லி போய் பவுலிங் செய் என்று சொன்னார். அப்போது எதுவும் பேசாத கிஷோர் தொடர்ந்து முறைத்து பார்த்துக் கொண்டே அவரிடம் சென்றார். உடனே நடுவர்கள் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினர். இருப்பினும் போட்டியின் முடிவில் இருவரும் சிரித்த முகத்துடன் கை கொடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் பாண்ட்யா தமக்கு நண்பர் என்றும், போட்டி சூழ்நிலையில் அப்படி நடந்து கொண்டதாகவும் சாய் கிஷோர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்ட்யா என்னுடைய நல்ல நண்பர். இருப்பினும் களத்திற்குள் நீங்கள் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். களத்திற்குள் யார் வேண்டுமானாலும் எதிரியாக இருப்பார்கள். ஆனால், நீங்கள் அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. நாங்கள் நல்ல போட்டியாளர்கள்.
போட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிட்ச்சில் எனக்கு பெரிய ஆதரவு கிடைக்காததால் எனது அணிக்காக தடுப்பாட்ட பவுலிங் செய்தேன். சூர்யகுமார் எனது நல்ல லென்த் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டார். அப்படி யாராவது நன்றாக விளையாடினால் நீங்கள் பாராட்டு கொடுக்க வேண்டும். எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி பவுலிங் செய்கிறேன்.
சூர்யாவை இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பார்த்துள்ளதால் அவருக்கு எதிராக எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று சொன்ன சுப்மன் கில்லுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். இந்த வருடம் நிறைய உழைத்துள்ளதால் 2025 ஐ.பி.எல் எனக்கு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






