ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி- தொடரையும் வென்றது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி- தொடரையும் வென்றது
Published on

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் இரு மாற்றமாக மனிஷ் பாண்டே, முகமது ஷமி நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் காயத்தால் இடம் பெறவில்லை. மேலும் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் கழற்றிவிடப்பட்டு டேனியல் சாம்ஸ், ஆண்ட்ரூ டை, மார்கஸ் ஸ்டோனிஸ் வாய்ப்பு பெற்றனர். பிஞ்ச் இல்லாததால் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு பொறுப்பு கேப்டன் மேத்யூ வேட் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் அமர்க்களமான தொடக்கம் தந்தார். அவரும், டார்சி ஷார்ட்டும் முதல் விக்கெட்டுக்கு 47 ரன் (4.3 ஓவர்) திரட்டிய நிலையில் பிரிந்தனர். டார்சி ஷார்ட் (9 ரன்), வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அரைசதத்தை கடந்த மேத்யூ வேட் வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் கொடுத்த மிக எளிதான கேட்ச் வாய்ப்பை விராட் கோலி நழுவ விட்டார். ஆனால் சுதாரித்து பந்தை உடனடியாக விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் வீச அவர் மேத்யூ வேட்டை (58 ரன், 32 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் செய்தார்.

பேட்டிங்குக்கு சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித் ஜோடியினரும் அதிரடியில் மிரட்டினர். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் ஓவரில் இரண்டு சிக்சர் விரட்டிய மேக்ஸ்வெல் 22 ரன்னில் (13 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். இதன் பிறகு ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்தது. அத்துடன் பவுலிங்கில் நிறைய வித்தியாசத்தை காண்பித்த தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் நேர்த்தியாக பந்து வீசி அசத்தினார். அவரது பவுலிங்கில் ஸ்டீவன் சுமித் கூட தடுமாறியதை பார்க்க முடிந்தது.

ஆனாலும் மற்ற பவுலர்களின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் வெளுத்துகட்டினர். ஸ்டீவன் சுமித் 46 ரன்களும் (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மோசஸ் ஹென்ரிக்ஸ் 26 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் நடராஜன் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். நடராஜனின் துல்லியமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.

அடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சற்று நிதானத்துக்கு பிறகு மட்டையை சுழட்டியடித்து அதிரடி ஜாலம் காட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் (5.2 ஓவர்) எடுத்து அருமையான அடித்தளம் போட்டனர். ராகுல் 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் ஷிகர் தவானும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து ரன்ரேட்டை குறைய விடாமல் பார்த்துக் கொண்டனர். தவான் 52 ரன்களும் (36 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நுழைந்தார்.

இன்னொரு பக்கம் பிரமாதமாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி, ஆண்ட்ரூ டையின் பந்து வீச்சில் டிவில்லியர்ஸ் பாணியில் ஸ்கூப் ஷாட்டாக பைன்லெக் திசையில் சிக்சர் விளாசி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். அந்த ஓவரில் கோலி மேலும் இரு பவுண்டரி விரட்டி நெருக்கடியை குறைத்தார். ஸ்கோர் 149 ரன்களாக உயர்ந்த போது கோலி (40 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்ஸ் வைடாக வீசிய பந்தை அடிக்க முயற்சித்து விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் பிடிபட்டார்.

இறுதிகட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவும், ஸ்ரேயாஸ் அய்யரும் கூட்டணி அமைத்தனர். கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 18-வது ஓவரில் 12 ரன்னும், 19-வது ஓவரில் 11 ரன்னும் எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. களத்தில் பரபரப்பு தொற்றியது.

20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த பாண்ட்யா 2-வது பந்தை சிக்சருக்கு அனுப்பினார். 3-வது பந்தில் ரன் இல்லை. தொடர்ந்து 4-வது பந்தை பாண்ட்யா மீண்டும் சிக்சருக்கு தெறிக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் இந்தியாவுக்கு தித்திப்பான வெற்றியையும் தேடித்தந்தார்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. பாண்ட்யா 42 ரன்களுடனும் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 12 ரன்னுடனும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். பாண்ட்யா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டிருந்தது. அத்துடன் ஒரு நாள் தொடரில் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்து விட்டது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

ஸ்கோர் போர்டு - ஆஸ்திரேலியா

மேத்யூ வேட் (ரன்-அவுட்) 58

டார்சி ஷார்ட் (சி) ஸ்ரேயாஸ்

(பி) நடராஜன் 9

ஸ்டீவன் சுமித் (சி) பாண்ட்யா

(பி) சாஹல் 46

மேக்ஸ்வெல் (சி) வாஷிங்டன்

(பி) தாகூர் 22

ஹென்ரிக்ஸ் (சி) ராகுல்

(பி) நடராஜன் 26

ஸ்டோனிஸ் (நாட்-அவுட்) 16

டேனியல் சாம்ஸ் (நாட்-அவுட்) 8

எக்ஸ்டிரா 9

மொத்தம் (20 ஓவர்களில்

5 விக்கெட்டுக்கு) 194

விக்கெட் வீழ்ச்சி: 1-47, 2-75, 3-120, 4-168, 5-171

பந்து வீச்சு விவரம்

தீபக் சாஹர் 4-0-48-0

வாஷிங்டன் சுந்தர் 4-0-35-0

ஷர்துல் தாகூர் 4-0-39-1

நடராஜன் 4-0-20-2

யுஸ்வேந்திர சாஹல் 4-0-51-1

இந்தியா

லோகேஷ் ராகுல்

(சி) ஸ்வெப்சன் (பி) டை 30

தவான் (சி) ஸ்வெப்சன்

(பி) ஜம்பா 52

கோலி (சி) வேட்

(பி) சாம்ஸ் 40

சாம்சன் (சி) சுமித்

(பி) ஸ்வெப்சன் 15

ஹர்திக் பாண்ட்யா

(நாட்-அவுட்) 42

ஸ்ரேயாஸ் அய்யர்

(நாட்-அவுட்) 12

எக்ஸ்டிரா 4

மொத்தம் (19.4 ஓவர்களில்

4 விக்கெட்டுக்கு) 195

விக்கெட் வீழ்ச்சி: 1-56, 2-95, 3-120, 4-149

பந்து வீச்சு விவரம்

டேனியல் சாம்ஸ் 3.4-0-41-1

சீன் அப்போட் 2-0-17-0

ஆண்ட்ரூ டை 4-0-47-1

மேக்ஸ்வெல் 1-0-19-0

மிட்செல் ஸ்வெப்சன் 4-0-25-1

ஹென்ரிக்ஸ் 1-0-9-0

ஆடம் ஜம்பா 4-0-36-1

ரோகித், பும்ரா இல்லாமல் சாதித்தது பெருமை அளிக்கிறது - விராட் கோலி

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ரோகித் சர்மா, பும்ரா ஆகிய இரண்டு முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் நாங்கள் இது போன்று விளையாடி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதை நினைத்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். நடராஜனின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய பணியை இப்போது உணர்ந்து செயல்படுகிறார். அதற்காக தனது முழு முயற்சியை வெளிப்படுத்துகிறார். நான் அடித்த அந்த ஸ்கூப் ஷாட் உண்மையிலேயே டிவில்லியர்சின் ஷாட். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த ஷாட் எப்படி இருந்தது என்று டிவில்லியர்சுக்கு மெசேஜ் அனுப்பி கேட்பேன் என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், நடராஜனின் பவுலிங் குறித்து பேசியாக வேண்டும். மற்றவர்கள் தடுமாறிய நிலையில் இவர் அபாரமாக பந்து வீசினார். அவரால் 10 ரன் வரை ஆஸ்திரேலியா குறைவாக எடுத்தது. அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என்று நினைத்தேன் என்றார்.

சிறப்பாக விளையாடி வருவதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாண்ட்யா, இது வேறு விதமான போட்டி. அதற்கு நான் தேவைப்படுவேனா? என்பது தெரியாது. அது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com