

ஆமதாபாத்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்தது.
பின்னர் களாமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்களில் 3 மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 25 வயதான அவருடைய சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
போட்டிக்கு பின் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் இந்திய அணிக்காக விளையாட தொடங்கி ஓராண்டு ஆகிறது. தொடர்ந்து நிலைத்தன்மையுடன் விளையாட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறேன்.
நாங்கள் ஓரணியாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கென திட்டம் இருந்தது. எதை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதனால் போட்டியில் பயன் கிடைத்தது. கேப்டன் ரோகித் சர்மா நல்ல ஆதரவு அளித்தார்.
இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதனால் என்னால் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடிந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.