அவர் ஒரு தரமான வீரர் என்பதை நிரூபித்து விட்டார் - கொல்கத்தா அணியின் கேப்டன்


அவர் ஒரு தரமான வீரர் என்பதை நிரூபித்து விட்டார் - கொல்கத்தா அணியின் கேப்டன்
x

image courtesy:twitter/@IPL

தினத்தந்தி 27 March 2025 7:30 PM IST (Updated: 27 March 2025 7:30 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

கவுகாத்தி,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 97 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். நடப்பு தொடரில் கொல்கத்தாவுக்கு இது முதல் வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே அளித்த பேட்டியில், "நாங்கள் பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினோம். அதேபோன்று மிடில் ஓவர்களிலும் எங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக மொயீன் அலி தனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்திவிட்டார். இந்த வடிவத்தில் வீரர்கள் பயமின்றி விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அதற்கு அனைத்து வீரர்களுக்கும் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அதன் காரணமாக வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுகின்றனர். மொயீன் அலி இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் அசத்தவில்லை என்றாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு தான் ஒரு தரமான வீரர் என்பதை நிரூபித்து விட்டார்" என்று கூறினார்.


1 More update

Next Story