பும்ராவை விட அவர் மிகச்சிறப்பாக பந்து வீசியவர் - இந்திய முன்னாள் வீரர் கருத்து


பும்ராவை விட அவர் மிகச்சிறப்பாக பந்து வீசியவர் - இந்திய முன்னாள் வீரர் கருத்து
x

image courtesy: AFP

தினத்தந்தி 18 Feb 2025 4:54 PM IST (Updated: 18 Feb 2025 6:12 PM IST)
t-max-icont-min-icon

பும்ரா அனைத்து வடிவங்களிலும் சாம்பியன் பவுலர் என்பதில் சந்தேகமே கிடையாது என்று பாலாஜி தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

முன்னதாக இந்த தொடரிலிருந்து நட்சத்திர பவுலரான பும்ரா காயம் காரணமாக விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் விலகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று பல தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் முகமது ஷமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் அணியை முன்னின்று வழி நடத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ரா அனைத்து வடிவங்களிலும் சாம்பியன் பவுலர் என்பதில் சந்தேகமே கிடையாது. ஆனாலும் பும்ரா வருவதற்கு முன்பாகவே இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை சுமந்தவர் முகமது ஷமிதான். கடந்த இரண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களிலும் பும்ராவை விட முகமது ஷமி மிகச்சிறப்பாக பந்து வீசிய அனுபவம் உடையவர். எனவே அவரது அனுபவம் நிச்சயம் இந்த முறையையும் அவருக்கு கூடுதல் சாதகத்தை தரும்.

இந்த தொடரில் அவரே இந்திய அணியை முன்னின்று வழிநடத்துவார் என்று நம்புகிறேன். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாம் வெல்ல வேண்டுமெனில் ஷமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சுக்கு திரும்ப வேண்டியது அவசியம். புதிய பந்தில் அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் இந்திய அணிக்கு பெரிய சாதகத்தை அளிக்கும்" என்று கூறினார்.

1 More update

Next Story