அவர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு தலைவர் - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

இலங்கை தொடரில் சந்தித்த தோல்விக்காக ரசிகர்கள் கம்பீரின் திறமையை சந்தேகப்பட வேண்டியதில்லை என்று உத்தப்பா தெரிவித்துள்ளார்.
அவர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு தலைவர் - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்
Published on

மும்பை,

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 0 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

இந்த தோல்விக்கு அனுபவமற்ற வாஷிங்டன் சுந்தர், துபேவை 4, 5-வது வரிசையில் களமிறக்கிய புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அனுபவமிக்க ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை பின்வரிசையில் களமிறக்கியதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை தொடரில் சந்தித்த தோல்விக்காக ரசிகர்கள் கவுதம் கம்பீரின் திறமையை சந்தேகப்பட வேண்டியதில்லை என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் அணியில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணரும் அளவுக்கு அனைத்து வீரர்களுக்கும் கம்பீர் போதுமான பாதுகாப்பு கொடுப்பதாகவும் உத்தப்பா புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ஐ.சி.சி. போன்ற பெரிய தொடர்களில் அசத்துவதற்கு தேவையான பாடங்களை இலங்கை போன்ற சாதாரண இருதரப்பு தொடரில் கம்பீர் தேடுவதாகவும் உத்தப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"கம்பீர் எப்போதும் அழுத்தத்தின் கீழ் செழித்து வளரும் ஒருவராக இருக்கிறார். அவர் பெரிய தொடர்களில் அசத்துவதற்கு தேவையான பாடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்த வரையில் இந்த அணிக்குள்ளேயே ஒரு தலைவராக இருக்கும் குணங்களை அவரிடமும் காண்கிறேன். அவர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார்.

ஒரு தலைவராக அவர் வீரர்கள் சிறந்து விளங்குவதற்கு உதவும் சூழலை உருவாக்குவார் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும். அந்த வகையான தலைவரான அவர் ஒரு சிறந்த தந்திரவாதி. அவர் அணிக்குள் வெற்றியை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தை வளர்க்கிறார். கவுதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு தலைவர். அதை நாம் செயலில் பார்த்தோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com