பந்துவீச்சில் என்னுடைய ரோல் மாடல் அவர்தான் - அன்ஷுல் கம்போஜ்

image courtesy:PTI
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக மாற்றுவீரராக சி.எஸ்.கே அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் இந்திய டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இந்திய ஏ அணியுடன் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியுடன் முதல் முறையாக இணைந்ததை அடுத்து தனது கிரிக்கெட் பயணம் குறித்து சில கருத்துக்களை அன்ஷுல் கம்போஜ் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் 12 வயதிலிருந்து தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன். என்னுடைய வளர்ச்சியில் என்னுடைய தந்தையின் பங்கும், ஆதரவும் அதிகம். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்து தான் கிரிக்கெட் விளையாடுவேன்.
என்னுடைய பந்துவீச்சில் நான் கிளென் மெக்ராத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டுள்ளேன். அவரைப் போன்று நிலையான பந்துவீச்சும், விக்கெட்டெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்தான் என்னுடைய கிரிக்கெட்டின் இன்ஸ்பிரேஷன். இவ்வாறு அவர் கூறினார்.






