இந்திய அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ராயுடு

மும்பைக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் 89 ரன்கள் அடித்தார்.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 89 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் கரண் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கரண் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக கடந்த காலங்களில் இந்திய அணிக்காக அறிமுகமான கருண் நாயர் அதில் 2016-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார்.
தற்போது உள்ளூர் தொடர்களில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்து வரும் அவர், மீண்டும் தேர்வுக்குழுவின் கவனத்தை தன் பக்கம் மீது ஈர்த்துள்ளார். இதனால் அவருக்கு மறுபடியும் இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.
தற்போது ஐ.பி.எல். தொடரிலும் நீண்ட நாள் கழித்து களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி 89 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் மீண்டும் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் விளையாட வேண்டும் என்று ராயுடு கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இது விடாமுயற்சி. ஏனென்றால் இந்தியாவில் உங்களுக்கு விஷயங்கள் சரியாக நடக்காதபோது நீங்கள் எதிர்கொள்வதை தாங்குவது எளிதல்ல. நிறைய பேர் அதைக் கடந்து வந்திருக்கிறார்கள், மிகச் சிலரே அதிலிருந்து சிறந்த முறையில் வெளியே வந்துள்ளனர். கருண் நாயர் அதில் ஒருவர்.
இந்திய அணியில் நீங்கள் தொலைந்து போனால், மீண்டும் வருவது மிகவும் கடினம். குறிப்பாக உங்களை சுற்றியுள்ள பல விஷயங்களால் நீங்கள் எப்போதும் இழுக்கப்படுவீர்கள். மேலும் பலர் உங்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். கிரிக்கெட் என்பது வேகமாக நகரும் ஒரு விளையாட்டு. ஆனால் கருண் நாயர் நகரவில்லை.
அவர் ஒருபோதும் வெளியேறவில்லை. கடினமாக உழைத்து, மீண்டும் வர முடியும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில். எனவே அவர் இங்கிலாந்து செல்வதற்கான விமானத்தில் இருப்பார் என்று நம்புகிறேன்" என கூறினார்.






