இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவனில் அவர் நிச்சயம் இடம்பெற வேண்டும் - பாண்டிங்


இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவனில் அவர் நிச்சயம் இடம்பெற வேண்டும் - பாண்டிங்
x

image courtesy:PTI

இந்தியா-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியில் ஐ.பி.எல். போட்டியில் கலக்கி வரும் தமிழகத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இன்னும் முழுமையாக காயத்திலிருந்து குனமடையாததால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற்றுள்ளார். வெள்ளைப்பந்து போட்டிகளில் கலக்கி வரும் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டியிலும் அசத்துவார் என்று பலரும் கூறிவருகின்றனர்.

அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து பேசிய அவர் கூறுகையில், "நானாக இருந்தால் அர்ஷ்தீப் சிங்கை முதல் போட்டியிலிருந்தே பிளேயிங் லெவனில் சேர்த்து கொள்வேன். அவர் மிகவும் திறமையானவர். அவரது பந்துவீச்சு இங்கிலாந்திலும் அணிக்கு உதவும் என்று நான் நினைக்கிறேன். உங்கள் அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இருக்கும்போது அவரை அணியில் சேர்த்து கொள்ளாதது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஏற்கனவே அவர் இங்கிலாந்து மண்ணில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர். 6 அடி 4 அங்குல உயரத்தில் இருப்பதால் அவருடைய இந்த கூடுதல் உயரம் இங்கிலாந்தில் பவுன்ஸ் பந்துகளை வீச அதிகளவில் உதவும். இங்கிலாந்தில் பந்து 30-40 ஓவர்களுக்கு பிறகும் ஸ்விங் ஆகும்.

அந்த ஸ்விங் பந்துவீச்சுத் திறனும் இடது கை வீரரும் உள்ள ஒருவரைக் கொண்டிருப்பது, அந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி நிச்சயமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். எனவேதான் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்" என கூறினார்.

1 More update

Next Story