இந்திய மண்ணில் அதிகபட்ச ‘சேசிங்’: நியூசிலாந்து வரலாற்று வெற்றி


இந்திய மண்ணில் அதிகபட்ச ‘சேசிங்’: நியூசிலாந்து வரலாற்று வெற்றி
x

285 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இந்திய மண்ணில் அதிகபட்ச ‘சேசிங்’ செய்து நியூசிலாந்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்கோட்,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 112 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே 16 ரன்களிலும், ஹென்ரி நிக்கோல்ஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வில் யங்-டேரில் மிட்செலுடன் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த வில் யங், 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். டேரில் மிட்செல் 131 ரன்கள்(11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார். மற்றும் க்ளென் பிளிப்ஸ்(32 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடைசியில் நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா-நியூசிலாந்து தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில், 285 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இந்திய மண்ணில் அதிகபட்ச ‘சேசிங்’ செய்து நியூசிலாந்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 283 ரன் இலக்கை விரட்டிப்பிடித்ததே இந்தியாவில் அந்த அணியின் அதிகபட்ச சேசிங்காக இருந்தது.

1 More update

Next Story