

அகமதாபாத்,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் ஓவரிலேயே 17 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் அமைத்தது. ஆனால் முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹோப் (16), கிங் (21), ஹெட்மயர் (2), பவல் (9), சேஸ் (2), ருதர்போர்டு (12) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
இந்த சூழலில் ஹோல்டர் - சைபர்ட் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை ஈடுபட்டனர். இதனால் அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 89 சேர்த்தது. ஹொல்டர் 49 ரன்னில் ரன் அவுட்டானார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. சைபர்ட் அரைசதமடித்து, 52 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நெகிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவும் பட்சத்தில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.